சென்னை: சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை - கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.” என உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஓர் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு எதிராக இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். அதில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு ரூ 1.10 கோடி இழப்பீடு தரவேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று (செப்டம்பர் 21) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் முன்னிலையானார். உதயநிதி தரப்பில் வழக்கறிஞர் யாரும் முன்னிலையாகவில்லை.
வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

