நாகர்கோவில்: தமிழக எல்லையில் நாள்தோறும் 200 டன்னுக்கும் மேற்பட்ட இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி வருகிறது கேரளா. இதனால் தமிழ் நாட்டில் நோய் பரவும் அபாயம் எற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கல், ஜல்லி உட்பட கனிம வளங்கள் தினமும் 600 டாரஸ் லாரிகளுக்கு மேல் கேரள மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இயற்கையை பாதுகாக்கும் கடும் விதிமுறைகளால் அங்கு ஒரு கல்லை கூட எடுக்க முடியாது.
அதேநேரம் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் கேரளா, இறைச்சி, மீன் மற்றும் மருத்துவக் கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டத்தின் களியக்கா விளை, நெட்டா, களியல், காக்கா விளை ஆகிய எல்லைகளைத் தாண்டி தினமும் வண்டி வண்டியாகக் கொட்டி வருகின்றனர்.
அத்துடன், கோவை, தேனி, தென்காசி, நீலகிரி என எல்லைகள் அனைத்திலும் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் தமிழ் நாட்டில் நோய் பரவும் ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள் நள்ளிரவில் நடந்துவருவதாக பாதிக்கப்பட்ட ஊர்களைச் சேர்ந்தோர் தெரிவிக்கின்றனர்.
கேரளாவில் நிபா கிருமி பரவியுள்ள நிலையில் களியக்காவிளை உட்பட கேரள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும்,. கேரளாவில் இருந்து மருத்துவ, மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதை கட்டுப்படுத்த சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அண்மையில் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் கேரள எல்லையில் உள்ள சிற்றூர் மக்களும் கேரளாவின் இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.