முதுநிலை ‘நீட்’ தேர்வின் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம்

2 mins read
c1788aac-1fb0-4e7b-a3b7-dface75638f8
நீட் தேர்வால் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியும் மனம் தளரா பாஜக அரசு இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்காக அந்த அரசை அகற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: முதுநிலை ‘நீட்’ தேர்வில் தகுதி மதிப்பெண்கள் (கட் ஆஃப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், “நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு கட்-ஆப்-ஐ பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய ‘தகுதி’ மற்றும் நுழைவுத் தேர்வில் ‘தகுதி’ என்பது அர்த்தமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக்குப் பணம் செலுத்துவது பற்றியது. தகுதி தேவையில்லை.

நீட் = பூஜ்ஜியம். நீட் தேர்வுக்கும் தகுதிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை, இதை நாம் காலம் காலமாகச் சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் நீட் தேர்வில் இல்லை. “பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்றியே ஆகவேண்டும்,” என்று அவர் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸும் மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்துள்ளார்.

“மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான இந்த ஆண்டு முதுநிலை ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக் கல்வியின் தரத்தைக் குறைப்பதற்கே வழிவகுக்கும். எனவே இந்த முடிவு கண்டிக்கத்தக்கது,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பதுதான் இதன் பொருளாகும்.

“முதுநிலை நீட் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 800. அதில் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

“அவ்வகையில், தேர்வு எழுதிய 2,517 பேரில், 1,20,000 பேர் மேற்கண்ட மதிப்பெண்களை பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரத் தகுதி பெற்றுள்ளனர்.

“இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களே 45,337 தான். அவற்றை நிரப்ப அந்த இடங்களைவிட கிட்டத்தட்ட மும்மடங்கினர் தகுதிபெற்று இருக்கும்போது, தகுதி மதிப்பெண்களைக் குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன?” என்று திரு அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்