சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்படி பழனிசாமி, தங்கள் கட்சிக் கொடியையும் சின்னத்தையும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், ஓபிஎஸ் அதிமுக கட்சியின் சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று வாதிட்டார்.
ஓபிஎஸ் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், இந்த மனுவுக்குப் பதில் அளிக்க குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு அக்டோபர் 6ஆம்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.