சென்னை: ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் பாட்டாளிக் கட்சித் நிறுவனர் ராமதாஸ் ஓர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும் பகுதி ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
“தமிழ் நாடு அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அரங்கத்தை கட்டுவதை விடுத்து ஆயிரம்காணி ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டக்கூடாது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
“சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்ற கண்காட்சி அரங்கம், ஊடக அரங்கங்கள், நட்சத்திர விடுதிகள், ஊர்தி நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பன்னாட்டு அரங்கம் கட்டப்பட வேண்டியது கட்டாயத் தேவைதான். ஆனால், அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் இன்னொரு உன்னத நோக்கத்தை சீர்குலைப்பதாக இருக்கக் கூடாது,” என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் பிறந்த ஆளவந்தார், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1,550 ஏக்கர் நிலங்களை இறைப்பணிக்காக வழங்கினார். அவரது பெயரில் செயல்பட்டு வரும் அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இப்போது 1,054 ஏக்கர் நிலம் உள்ளது.

