சென்னை: பிறவியிலேயே இதய பாதிப்பு உள்ள திருவொற்றியூரைச் சேர்ந்த மணிமாலா, 24, என்ற கர்ப்பிணி, முழு இதய ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்ட நிலையில், இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்தும் கருவி (பேஸ்மேக்கர்) உதவியுடன் வெற்றிகரமாக பிரசவித்தார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக இந்தச் சாதனையை சென்னையில் உள்ள ராயபுரம் அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை நிகழ்த்தி உள்ளது.
அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து இச்சாதனை படைக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
திருமதி மணிமாலா அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்தார்.
இத்தகவலை அறிந்துமே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மருத்துவமனைக்குச் சென்று திருமதி மணிமாலாவையும் அவர் பெற்று எடுத்த குழந்தையையும் கண்டு, மருத்துவக் குழுவினரைப் பாராட்டினார். அமைச்சர் அந்த மருத்துவமனையில் ரூ.17 லட்சம் செலவில் தயாரான மின்னிலக்க நுண்கதிர் பரிசோதனைக் கருவி சேவையையும் தொடங்கிவைத்தார்.

