சென்னை: இந்து ஆலயங்களுக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டில் புராதன கோயில்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் பலவும் அரசு நிர்வாகத்தின்கீழ் உள்ளன.
தொன்மையான கோயில்களில் பலவும் சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றன.
இத்தகைய மிக முக்கியமான கோயில்களின் தொன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 237 தொன்மையான கோயில்களில் பழைமைப் பாதுகாப்புத் திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமயஅறநிலையத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இதன் தொடர்பில் கூட்டம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கைலாசநாதர் கோயில், செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அய்யனார் கோயில், ஆலங்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில், பொள்ளாச்சி கருப்பராயசுவாமி கோயில்;
ஈரோடு சத்தியமங்கலம் பகவதியம்மன் கோயில், காங்கேயம் காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை திருப்பத்தூர் சோழைகாத்த அய்யனார் கோயில்;
காளையார்கோவில் காளியம்மன் கோயில், ராமநாதபுரம் எருமைப்பட்டி சித்தி விநாயகர் கோயில், திருவாடானை மகாலிங்கசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களின் பழமைகெடாமல் அவற்றைப் புதுப்பிக்க திட்டம் விரைவில் தொடங்கும் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

