கையைச் சுட்டுக்கொண்ட தக்காளி விவசாயிகள்

2 mins read
96f82005-9fac-4574-9e4c-0c42cd9c28e5
தக்காளி பயிரிட்டவர்கள் கையைச் சுட்டுக்கொண்ட நிலைக்கு ஆளாகிவிட்டனர். ஆகையால் அரசாங்கம் உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - படம்: தமிழக ஊடகம்

தர்மபுரி: இந்தியாவில் ஒரு மாதத்திற்கு முன் தக்காளி விலை கிலோ ரூ.200 வரை விற்றது. அது பெரும் பிரச்சினையானது.

தக்காளி விற்றே சிலர் கோடீஸ்வரர் ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், தக்காளி விலையைக் கண்டு ஊக்கம் அடைந்த தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பலரும் மும்முரமாக தக்காளியைப் பயிரிட்டனர்.

ஆனால் தக்காளி விலை ஒரே மாதத்தில் அடி மட்டத்தைத் தொட்டு விட்டது. கிலோ ரூ.8க்கு விற்கப்படுகிறது.

இதனால் தர்மபுரியில் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கையைச் சுட்டுக்கொண்ட நிலைக்கு ஆளாகி விட்டார்கள்.

ஆகையால் தக்காளிக்குக் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும்படி அரசாங்கத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் தொடர்பில் கருத்து கூறிய எஸ் பொன்மணி என்ற விவசாயி, “ரூ. 200க்கு விற்ற தக்காளி ரூ.8க்கு வந்துவிட்டது. ஆனால் உரம், ஆள் கூலி, பூச்சிமருந்து விலை ஒன்றும் குறையவில்லை.

“ஓர் ஏக்கரில் தக்காளி பயிர் செய்ய ரூ.12,000 செலவாகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தக்காளியில் லாபம் பார்க்க முடியவில்லை. உழைப்பதற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை.

“தக்காளி பயிரிட வேண்டாம் என்றுதான் நண்பர்கள் பலரும் சொன்னார்கள்.

“ஆனால் பருவமழை தாமதமடைகிறதே பயிரிட்டுத்தான் பார்ப்போமே என்று நான்தான் தக்காளி விவசாயத்தில் இறங்கினேன்.

“கையைச் சுட்டுக்கொண்டேன். விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் சில திட்டங்களை அறிவிக்கத்தான் வேண்டும் என்று அவர் கூறினார்.

“தக்காளி விலை ரூ 200க்கு விற்றதால் பலரும் தக்காளியை விளைவித்ததால் சந்தைகளுக்குத் தக்காளி வரத்து அதிகமாகிவிட்டது. அதனால் விலை படுபாதாளத்திற்கு சரிந்துவிட்டது,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்