மெரினா கடற்கரை சாலை வாகனச் சோதனையில் சிக்கிய ‘கஞ்சா’ வாலிபர்கள்

மெரினா கடற்கரை சாலை வாகனச் சோதனையில் சிக்கிய ‘கஞ்சா’ வாலிபர்கள்

1 mins read
231ecfb1-d9f5-454c-a6e6-a4ef017c49f6
மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவில் வந்த 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சென்னை: மெரினா கடற்கரையில் காவல்துறை மேற்கொண்ட வாகனச் சோதனையில் கஞ்சாவுடன் இரு வாலிபர்கள் பிடிபட்டுள்ளனர்.

சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே காவல்துறை ஆய்வாளர் ஜானகிராமன் தலைமையில் காவல்துறையினர் சனிக்கிழமை அதிகாலை வாகனச் சோதனை நடத்தினர்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை அவர்கள் மடக்கிப்பிடித்தனர்.

ஆட்டோவில் இரண்டு பேர் இருந்தனர். அவர்களுடைய பையை சோதனையிட்டதில் பத்து கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து கஞ்சா வைத்திருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இரவு சுற்றுக்காவல் ஆய்வாளர் வகிதா பேகம் விசாரணை நடத்தினார்.

இருவரும் தெலுங்கானா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்களில் ஒருவன், 17 வயது சிறுவன். இவர்கள், விஜயவாடாவில் இருந்து செகந்திரபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து, பின்னர், கேளம்பாக்கத்தைச் சேர்ந்த சிவா என்ற கஞ்சா வியாபாரியிடம் ஒப்படைப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாடகை ஆட்டோ மூலம் புறப்பட்டு வந்தது தெரியவந்தது.

ஆட்டோவையும் பத்து கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்