சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத். துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பாக தமிழ்நாடு அரசின் கொள்கை வரைவு தயாரிப்பதற்கான கருத்தரங்கை அத்துறையின் அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், அனிமேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் தற்போது அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
உலகளாவிய சந்தையில் இந்தத் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றும் இத்துறைகளில் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழகத்தில் படித்த இளையர்கள் அதிகம் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
“எனவே, இளையர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதை மனதிற்கொண்டு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,” என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

