சென்னை: கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த தாதியர் தங்களுக்கு நிரந்தரப் பணி வழங்கக்கோரி கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா நெருக்கடி வேளையில் தமிழக அரசு 3,000 தாதியரை தற்காலிக முறையில் பணியமர்த்தியது.
எனினும், நெருக்கடி முடிவுக்கு வந்ததும் பணிக்காலம் முடிவடைந்ததால் அவர்களை கடந்த ஆண்டு பணியில் இருந்து விடுவித்தது அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாதியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டுள்ள தாதியர்க்கு ஆறு வாரங்களுக்குள் உரிய பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
கடந்த ஜூலை மாதமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை என தாதியர் தரப்பு தெரிவித்துள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததைக் கண்டித்து தாதியர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
மூன்று நாள்கள் இப்போராட்டம் நடைபெறும் என்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட தாதியர் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பலர் தங்களுடைய கைக்குழந்தைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பினர்.

