தொடர்மழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் வேகமாக நிரம்பும் ஏரிகள், அணைகள்

தொடர்மழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் வேகமாக நிரம்பும் ஏரிகள், அணைகள்

2 mins read
0707f19c-7edf-4315-b039-2e726c3e3962
பூண்டி ஏரி. - படம்: ஊடகம்

தேனி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால் ஆங்காங்கே உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து சில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து ஆற்றுக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே, பூண்டி ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாகவும் நீர் வரத்து அதிகரித்தால் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூண்டி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொசஸ்தலை ஆறு வழியாக கடலில் சென்று சேரவுள்ளது. இதனால் இந்த வழிப்பாதையில் உள்ள 63 கிராம மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கின் முன் நின்று ‘செல்ஃபி’ படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த ஏரி மிக விரைவில் அதன் முழு கொள்ளளவை எட்டிப்பிடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, தேனி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது என்றும் மஞ்சளார் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளது என்றும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

கடந்த இரு மாதங்களாகவே இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை சரியாகப் பெய்யவில்லை. இதனால் நீர்வரத்து குறைந்துபோனது.

இந்நிலையில் கடந்த நான்கு நாள்களாக இவ்விரு அணைப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவு 126.28 அடியாகும். அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் 5 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்து 83.31 அடியாக உள்ளது.

அதேபோல், மஞ்சளார் அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். அணையின் நீர்மட்டம் தற்போது 51.80 அடியாக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்