நாகை: நாகப்பட்டினம் மீனவர்களைத் தாக்கி, கொள்ளையடித்த விவகாரம் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் ஏழு பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
கடந்த 21ஆம் தேதி நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் சிலர் இரு அதிவேக படகில் வந்து நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர், கத்தி முனையில் மீன்கள், தளவாடப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
கடற்கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதாகவும் பல லட்சம் மதிப்புள்ள மீன்கள், வழிகாட்டும் கருவிகள், கைப்பேசிகளை பறித்துக் கொண்டதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இலங்கைக் கடற்கொள்ளையர்கள் ஏழு பேர் மீது நாகை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மீனவர்கள் மீது கல் வீசி தாக்குதல்
இதற்கிடையே, நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
ராமேசுவரத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் அண்மையில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இரண்டு சிறிய சுற்றுக்காவல் படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது இலங்கை கடற்படையினர் கப்பலில் இருந்தபடி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பின்னர் மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.