3.2 லட்சம் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்; 3 கோடி ஊழியர்கள் பாதிப்பு

2 mins read
c78b4f5a-2dfd-49d9-b164-8cca3a401d13
சிறு, குறு நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: ஊடகம்

திருப்பூர்: மின் கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3.2 லட்சம் தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

கோவையில் 30,000 நிறுவனங்கள் உட்பட திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 63,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன.

தொழில் துறையினர் கதவடைப்பு போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் 1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மூன்று கோடி ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பூரில் மட்டும் 10,000 நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் அங்கு 300,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை ஒரு நாள் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் சூழல் உருவானது என தொழில்துறையினர் தெரிவித்தனர்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கடந்த ஓராண்டாக தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் முதல்கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான காரணம்பேட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கதவடைப்புப் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.

மூலப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக தொழில் நலிவடைந்து வந்த நிலையில் மின் கட்டண உயர்வு காரணமாக தொழிலை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிறுவனங்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்