சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் அடுத்தடுத்து இரு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொழில், வணிகப் பிரிவினருக்கான மின்சாரக் கட்டணம் நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்த்தப்பட்டிருப்பதால் பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதுடன், முதலீடு வெளியேறுதல், வேலையிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்கட்டணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 52% வரை உயர்த்தப்பட்டது. தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணமும் கிட்டத்தட்ட அதே அளவில் உயர்ந்தது. அதனால், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டன.
“கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் மீண்டும் 2.18% உயர்த்தபட்டது,” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து விதிக்கப்பட்ட தாங்க முடியாத மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அழிவின் விளிம்புக்கே சென்று விட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தொழில் பிரிவின் நடத்தும் போராட்டங்்களை அவர்களைக் காப்பாற்றக் கோரி விடுக்கும் அபயக்குரலாகவே அரசு பார்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
“மின் கட்டண உயர்வை எதிர்த்து கோவை மாவட்ட சிறுதொழில் நிறுவனங்கள் சங்கம் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. ஏறக்குறைய மூன்று கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர் என்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்,” என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

