சென்னை: உடல் உறுப்பு தானம் செய்த ஆடவரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. 37 வயதான இவர் அரசு ஊழியர் ஆவார்.
கடந்த 23ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வடிவேலு மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தார் நன்கொடையாக வழங்கினர்.
தமிழகத்தில் உடல் உறுப்புகளை நன்கொடையாக அளிப்பவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதை பல்வேறு தரப்பினரும் வரவேற்ற நிலையில், வடிவேலுவின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமையன்று அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல் உறுப்பு நன்கொடையாளருக்கு அரசு மரியாதை செலுத்த தேனி செல்வதாகவும் முதல்வரின் அறிவிப்பு செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

