மதுரை: டெங்கிக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அக்டோபர் 1ஆம் தேதியன்று ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்றும் தற்போது தமிழகத்தி்ல் டெங்கிக் காய்ச்சல் பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும் மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
மதுரையில் இதுவரை 17 பேர் டெங்கி பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் டெங்கி பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
“மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்புக்காக 476 மருத்துவக் குழுக்கள் இயங்குகின்றன. 805 நடமாடும் பள்ளி மருத்துவக் குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கடந்த 2012ஆம் ஆண்டில் 13,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் 2017ஆம் ஆண்டில் 23,000 பேர் பாதிக்கப்பட்டு, 65 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.