சென்னை: தமிழகத்தில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் அவற்றின் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் சண்முகம் வீடு, அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.
சண்முகத்துக்கு சென்னை தி.நகரிலும் வீடு உள்ளது. அங்கும்கூட ஐந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் நாற்பது இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிமணி, பாஜக மாவட்டத் தலைவர் காளிதாஸ் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா நெருக்கடி காலத்துக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடைந்து வருவதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் நீண்ட கண்காணிப்புக்குப் பிறகே அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிறுவனங்கள் தொழிலில் முதலீடு செய்துள்ள பணம் எந்த வகையில் திரட்டப்பட்டது? முதலீடு தொடர்பாக முறையான கணக்குகள் காட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மேலும், சில நிறுவனங்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

