சுற்றுலாத் துறை தனி தொழில்துறையாக அறிவிப்பு; ரூ.20,000 கோடி முதலீடு திரட்ட தமிழ்நாடு திட்டம்

சுற்றுலாத் துறை தனி தொழில்துறையாக அறிவிப்பு; ரூ.20,000 கோடி முதலீடு திரட்ட தமிழ்நாடு திட்டம்

2 mins read
e8134b0e-c578-4986-8861-0ebf6c265a78
தமிழகத்தில் பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை, வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள், பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளதை கொள்கை அறிக்கை சுட்டியது.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறைக்குத் தொழில்துறைத் தகுதி அளிக்கப்பட்டு உள்ளது.

அந்தத் துறைக்கு ரூ.20,000 கோடி தனியார் முதலீட்டைக் கவரவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டு அரசாங்கம் முதன்முதலாக செவ்வாய்க்கிழமை தன்னுடைய சுற்றுலாக் கொள்கை-2023ஐ அறிவித்தது.

சுற்றுலாத் துறை தொழில்துறையாக வகைப்படுத்தப்பட்டு இருப்பதை அடுத்து சுற்றுலாத் திட்டங்களும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களும் மற்றவர்களும் தொழில்துறை மேம்பாட்டு நிதியைப் பெற தகுதிபெறுவார்கள்.

அந்தத் துறையில் சிறந்த வேலை வாய்ப்புகள் உருவாகும். அதிகமானோர் பயிற்சிபெறவும் வழி ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலாத் தொழில்துறையில் முன்னுரிமைத் துறைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

புதிய சுற்றுலா இடங்களும் அடையாளம் காணப்பட்டு அவை மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023’ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 12 முன்னுரிமைத் துறைகள் முதல் ஊக்கத்தொகை வரை அதில் அடங்கி உள்ளன.

தமிழகத்தில் பல்வகையான சுற்றுலாத் தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை, வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளதை அந்தக் கொள்கை அறிக்கை சுட்டியது.

சாகசச் சுற்றுலா, பொழுதுபோக்குச் சுற்றுலா, ஒன்றிணைந்த சுற்றுலா, கிராமப்புற, தோட்டத்துறைச் சுற்றுலா, கடலோரச் சுற்றுலா, கலாசாரச் சுற்றுலா, மருத்துவம், உடல்நலச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா;

கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சியைப் புதிய கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனியார் முதலீட்டை ஊக்குவிக்க 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ரூ.20,000 கோடி தனியார் முதலீட்டைக் கவரவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்