அதிமுக-பாஜக உறவு முறிவு நிரந்தரமா என்பது தெரியவில்லை: பிரேமலதா

அதிமுக-பாஜக உறவு முறிவு நிரந்தரமா என்பது தெரியவில்லை: பிரேமலதா

2 mins read
4478ecc7-5a87-4244-be71-f2271f2c66e9
தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

தஞ்சாவூர்: எந்தக் கூட்டணியில் தேமுதிக இருக்கும் என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “அதிமுக, பாஜக கூட்டணி பிரிந்து இரண்டு நாள்கள்தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை.

“இந்தக் கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம்தான் காரணம். இது நிரந்தரமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தேமுதிக எடுக்கும். கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை உரிய நேரத்தில் விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார்.

“காவிரிப் பிரச்சினை கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை.

“மழைக்காலம் வந்தால் காவிரிப் பிரச்சினையை மறந்துவிடுகிறோம். செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வந்தவுடன் மீண்டும் இப்பிரச்சினை உருவாகிறது.

“இனிமேலாவது இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும்.

“இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“தேமுதிக என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

“டெல்டா மாவட்டங்களில் சரியாக தூர்வாரவில்லை. மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது,” என்றார் பிரேமலதா.

குறிப்புச் சொற்கள்
அரசியல்