12 மணி நேர வேலையை எதிர்த்தவர்கள் மீதான வழக்குகள் ரத்து

12 மணி நேர வேலையை எதிர்த்தவர்கள் மீதான வழக்குகள் ரத்து

1 mins read
e1354014-967d-48c8-a2d8-4c6a9f5da36e
போராட்டத்தில் பங்கேற்றதால் மாணவர்கள் பல சிரமங்களுக்கு ஆளானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

மதுரை: 12 மணி நேர வேலைத் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு 12 மணி நேர வேலைச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக திடீர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் போனிபாஸ் உள்ளிட்ட 26 பேர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.

அதில், “இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் அவசரம் அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“இந்த வழக்கால் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்வதிலும், வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் பெறுவதிலும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதிலும் பிரச்சினையைச் சந்தித்து வருகின்றனர். எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்,” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, மனுதாரர்கள் மீதான போராட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்