சென்னை: மெரினா கடற்கரையில் காவல்துறை அதிகாரி போல நடித்து காதல் ஜோடியிடம் கொள்ளையடித்த பலூன் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் நொச்சிகுப்பத்தைச்சேர்ந்த அசர் அலி, வயது 30, பலூன் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர், இரவில் வீடு புகுந்து திருடுவதிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஏற்கெனவே இவர் மீது அடையாறு, வியாசர்பாடி காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அண்மைய காலமாக அசர்அலி திருட்டுத் தொழிலிலிருந்து விலகியிருந்தார்.
இதற்குப் பதிலாக மெரினா கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளிடம் காவல்காரர் போல நடித்து நூதன முறையில் பணம் பறித்து வந்தார்.
ஒரு காதல் ஜோடியை மிரட்டி ‘ஜிபே’ மூலம் தனது வங்கி கணக்கிற்கு ரூ.12,000 போடச்சொல்லி ஏமாற்றியிருக்கிறார்.
இதில் பணத்தை இழந்த காதலனிடம் அவரது கைபேசியில் அழைத்து மீண்டும் ‘ஜிபே’ மூலம் ரூ.10,000 போடச்சொல்லி இருக்கிறார். இல்லா விட்டால் வழக்கு போடுவேன் என்று பலே பலூன்காரர் மிரட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் செய்வதறியாத அந்த காதலன் மெரினா காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.
இம்முறை ‘ஜிபே’ மூலம் பணம் போட காதலன் மறுத்துவிட்டார்.
நேரில் வந்து பணத்தை கொடுப்பதாகவும் அசர் அலியிடம் அவர் கூறியுள்ளார்.
நேரில் வந்து பணம் தருவதாக சொன்ன காதலன், காவல்துறை அதிகாரிகளுடன் வந்தார். அப்போது அசர் அலி மெரினாவில் பலூன் விற்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

