ஆண்டுக்கு 2.5 லட்சம் அரசு வேலை வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

2 mins read
fdc1aa50-91be-46f5-8ea3-b22676d0a45e
திமுக வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்கிறார் அன்புமணி ராமதாஸ் - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் திமுக வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை குறித்த வாக்குறுதி அப்படியே தான் உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை என பாமக தலைவர் தலைவர் அன்புமணி ராமதாஸ் குறை கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டில் அனைத்து அரசுத் துறைகளிலும் சேர்த்து 4,00,000க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களால் அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. நடப்பாண்டில், 6553 இடைநிலை ஆசிரியர்கள், 3587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 10,140 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தும் இதுவரை ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை கூட இன்னும் வெளியிடப்படாததால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகக் கூட அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்பில்லை.

“திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை,” என்று அன்புமணி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்