நான் காலையில் பழையதுதான் சாப்பிட்டேன்: ஆளுநர் தமிழிசை

நான் காலையில் பழையதுதான் சாப்பிட்டேன்: ஆளுநர் தமிழிசை

1 mins read
98648bb0-f3ab-4d1f-863a-6d885ad053bb
தமிழக, புதுச்சேரி உணவுப் பழக்கத்துக்கு இணையாக வேறு உணவு பழக்கம் இல்லை என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுச்சேரி: “காலையில் பழையதில் இருக்கும் ஊட்டச்சத்து எதிலும் இல்லை. நானும் காலையில் பழையதுதான் சாப்பிட்டேன். புதுமை பெண்ணாக இருந்தாலும் நான் சாப்பிடுவது பழையதுதான். பூரி, வடை காலையில் சாப்பிடுவதை தவிருங்கள். உப்பு, எண்ணெய் குறையுங்கள் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி ஜவகர் நகரில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் நடந்த சத்துணவு மாத விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பேசினார்.

“மருத்துவர் என்ற முறையில் அனைவருக்கும் ஊட்டச்சத்து தேவை என்று சொல்வேன். உலக சுகாதார நிறுவனம் கூறுவது, இந்திய பெண்களில் 70 விழுக்காட்டினர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நன்கு சாப்பிட்டால் போதும். தினமும் முருங்கை கீரை உட்பட ஒரு கீரை, காய்கறிகள்,வாழைத் தண்டு, சுரைக் காய் சாப்பிட வேண்டும்.

“தமிழக, புதுச்சேரி உணவு பழக்கத்துக்கு இணையாக வேறு உணவு பழக்கம் இல்லை. சோற்றுடன் முதலில் பருப்பு நெய், அடுத்து சாம்பார், ரசம், மோர், காய்கறிகள் சாப்பிடுகிறோம். இது சரி விகித உணவு. நெய் நல்ல கொழுப்பு. பசுவிடம் இருந்து வரும் எதுவும் கெட்டது இல்லை. நல்ல பசும்பால் சாப்பிட்டால் யாரும் குண்டாக மாட்டார்கள்.

“உலகிலேயே சாப்பிட்டு விட்டு செரிக்க ரசம் சாப்பிடுவது இங்கு மட்டும்தான், உலகில் எங்கும் கிடையாது. முன்னோர் நன்கு சிந்தித்துள்ளனர்.

“கொரோனா காலத்தில் சாப்பிட சொன்ன விஷயங்கள் அனைத்தும் ரசத்தில் இருந்தது,” என்று தமிழிசை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்