தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளின் மேல்முறையீடு தள்ளுபடி

2 mins read
43e4ab0a-fff3-4a51-9612-152ba636d4ef
தீர்ப்புக்குப் பின்னர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வாச்சாத்தி பகுதி பெண்கள். - படம்: ஊடகம்

சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறி, 1992 ஜூன் 20 ஆம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த வழக்கில் 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என 2011ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளில் 12 வனத்துறை அதிகாரிகளுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறையும் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறையும் மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் மூவாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வாச்சாத்தி மலைக்கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

குற்றவாளிகளிடம் ரூ.5 லட்சம் வசூலித்து அரசின் ரூ.5 லட்சம் சேர்த்து ரூ.10 லட்சம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தீர்ப்பளிக்கும்போது 54 பேர் உயிருடன் இல்லாததால் மீதி இருக்கும் 215 பேருக்கும் தர்மபுரி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நீதிபதி வேல்முருகன் உறுதி செய்தார்.

குறிப்புச் சொற்கள்