சென்னையில் கனமழை: விமானச் சேவை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2 mins read
2b85af65-4dde-4d3b-8a60-081a4c31724b
பத்து மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல மனமின்றி வீடுகளுக்குள் முடங்கினர். சில மாவட்டங்களில் மழை நீடிக்கும் என கணிக்கப் பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

சனிக்கிழமையும் மழை நீடித்ததால் சென்னையிலும் கோவை, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட பத்து மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சனிக்கிழமை கனமழை பெய்தது.

வெள்ளிக்கிழமை இரவு வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் 8 சென்டிமீட்டர் மழையும் கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருந்தன.

சென்னை மாநகரம், அதன் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் நான்கு மணியளவில் தொடங்கிய மழை அடுத்த நான்கு மணி நேரத்துக்கு கொட்டித் தீர்த்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் வாகனமோட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இடியுடன் கூடிய மழையால் சென்னையில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்க நேர்ந்தது.

வானிலை சீரானதும் அவை வரிசையாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டன.

அதேபோல் சென்னையில் இருந்து செல்லவேண்டிய அபுதாபி விமானம் உட்பட ஆறு விமானங்களின் புறப்பாடு தாமதமானது.

குறிப்புச் சொற்கள்