சென்னை: ஒருவர் தனது கருத்துகளையும் கொள்கைகளையும் இன்னொருவரிடம் பேசுவதே, மிகப்பெரிய பரப்புரைதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக திராவிட மாதம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான அவர் உரையாற்றினார்.
அப்போது, திமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் கட்சியை வளர்க்கவும் சமூக ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மேலும், திமுக வேட்பாளர்கள் தேர்தலில் தோற்றால் மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மக்களை திசைதிருப்பவும் ஏமாற்றவும் அவதூறு பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஒரே வட்டத்திற்குள் சுருங்கிடாமல், வெவ்வேறு தளங்களைச் சென்றடைய சமூக ஊடகங்கள் பெரிதும் பயன்படுகிறது என்றார்.
“தமிழ்நாட்டைக் கடந்து திமுகவின் கருத்துகளை, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று வெவ்வேறு மொழிகளில் கொண்டு செல்கிறோம். தமிழ்நாட்டில் முடங்கிக் கிடப்பார்கள் என்று பார்த்தால், இந்தி பேசும் மாநிலத்திற்கும் வந்துவிட்டார்களே என்று நம்மைக் கண்டு புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
“நாடாளுமன்றத் தேர்தலுக்கான எனது பிரசாரத்தை நான் தொடங்கிவிட்டேன். நாம் சேர்ந்து முன்னெடுப்போம், வெற்றி பெறுவோம். இந்திய அரசியலில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருக்கும் நாம்தான், ‘பாட்காஸ்ட்’ பிரசாரத்திலும் முன்னோடியாக இருக்கிறோம்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை எதிர்த் தரப்பினரும்கூட கேட்பதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலமாக வீண் வெறுப்பிலும் –பொய்களை நம்பி அறியாமையிலும் இருக்கும் தரப்பினர், உண்மைகளைப் புரிந்துகொண்டு மனம் மாறுவார்கள் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம். தேர்தலில் நமது வேட்பாளர் தோல்வி கண்டால், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும், தேர்தல் பார்வையாளர்களுக்கு ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்களும் நீக்கப்படுவர்,” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்தார்.

