தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு

1 mins read
b05aac7e-10c0-42ca-87e9-5e7e5532ef45
பொன்முடி. - படம்: ஊடகம்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தாம் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரி அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதே சிக்கலை எதிர்கொண்டுள்ள மற்ற அமைச்சர்களும் இதே நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் பொன்முடியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

எனினும், இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு செய்தார்.

இதையடுத்து, தாமாக முன்வந்து இவ்வழக்கை அவர் விசாரிக்கத் தொடங்கினார். இதேபோல் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளையும் அவர் தாமாக முன்வந்து விசாரிக்கிறார்.

இந்நிலையில், இந்த விசாரணைக்குத் தடைகோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார் அமைச்சர் பொன்முடி.

குறிப்புச் சொற்கள்