சென்னை: காலஞ்சென்ற நடிகர் சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர் வளத்துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு குடும்பத்தினர், திரைப்பட நடிகர்கள் ஆகியோரும் இருந்தனர்.
முன்னதாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளம் சிவாஜி கணேசன் என்று புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.
“நடிப்பின் இமயமாய், தமிழர் களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ், தரணியும் தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.