சென்னை: தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த ஒன்பது விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித் துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் சாதனை படைத்த தமிழக விண்வெளி விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவன், மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் திட்ட இயக்குநர் வீர முத்துவேல், ஆதித்யா திட்ட இயக்குநர் நிகர்ஷாஜி உள்ளிட்ட விஞ்ஞானிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழனாகப் பிறந்த பெருமையை தாம் இன்று அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகியோர் பிறந்த மண் இந்த தமிழ்நாடு மண். சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் பணி பெருமைக்கு உரியது.
“தமிழ்நாட்டிற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த விஞ்ஞானிகள் ஒன்பது பேருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“மேலும், 7.5% ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிக்கும் ஒன்பது மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படும்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.