மாநிலம் முழுவதும் 2,183 மருத்துவ முகாம்கள்; 143,000 பேருக்குப் பரிசோதனை

மாநிலம் முழுவதும் 2,183 மருத்துவ முகாம்கள்; 143,000 பேருக்குப் பரிசோதனை

1 mins read
048e9292-6b82-435b-9ab7-b6b71713c709
சென்னையில் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று 2,183 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

முகாம்களுக்கு வந்த 143,000 பேருக்கு காய்ச்சல் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநிலம் முழுவதும் குடியிருப்புப் பகுதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இதன் மூலம் 1,434 பேருக்கு காய்ச்சலும் 1,340 பேருக்கு இருமல் மற்றும் சளி பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது. பரிசோதனைக்குப் பின்னர் அதிகமான பாதிப்பு உள்ள 18 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசுக்கள், கிருமித்தொற்றுகள் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு தொற்று நோய்களுக்கு மத்தியில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளதாக சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

“சென்னையில் 15 மாநகராட்சி மண்டலங்கள் உள்ளன. மண்டலத்துக்கு தலா மூன்று இடங்கள் வீதம் 45 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

“கடந்த ஜூன் முதல் இதுவரை 3,962 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 133,589 பேர் பயனடைந்துள்ளனர்.

“சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு டெங்கி பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,” என்றார் மேயர் பிரியா.

குறிப்புச் சொற்கள்
டெங்கி