காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், புதிய விமான நிலையத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு மூன்று வாரங்களில் ஆய்வு அறிக்கையை அரசிடம் ஒப்படைக்க உள்ளது.
காஞ்சிபுரத்துக்கு அடுத்துள்ள பரந்தூர் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.
இதற்கு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடந்த 433 நாள்களாக விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்புக் குழுவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நீர்நிலைகள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவினர் பரந்தூர், வளத்தூர், அக்கமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்தனர்.