தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

2 mins read
841c22d1-423c-48e2-8ec6-b1b9a9f4bd51
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை- மாதவரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் 1,380 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி முடிவடைந்துள்ளது.

அதிகபட்சமாக, மாதவரம் பால் பண்ணை- மாதவரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் 1,380 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை(45.4 கி.மீ.) 3வது வழித்தடம், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை(44.6 கி.மீ.) 5வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், 43 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படஉள்ளன.

அதிகபட்சமாக மாதவரம் – சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது. மாதவரத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

3வது வழித்தடத்தில் பசுமை வழிச் சாலையில் சுரங்கப்பாதை பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கலங்கரை-பூந்தமல்லி வரை 4வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்தமாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4 கி.மீ. வரை சுரங்கப்பாதை பணி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், “இரண்டாம் கட்ட திட்டத்தில் சுரங்கப்பாதைப் பணிக்காக, தற்போது 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுவரையில் 4,333 மீட்டர் அதாவது, 4 கி.மீ. தொலைவைக் கடந்துள்ளது. ஒவ்வொரு சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரமும், தினமும் 10 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதையை அமைக்கின்றன. அந்தவகையில், மாதவரம் பால்பண்ணை-மாதவரம் நெடுஞ்சாலை வழித்தடத்தில் அதிகபட்சமாக 1,380 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

“மாதவரம் பால் பண்ணை-வேணுகோபால் நகர், பசுமை வழிச்சாலை –அடையாறு சந்திப்பு, கலங்கரை விளக்கம்–திரு மயிலை, சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும்பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

“இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது வரை 17 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தத் தயாராக உள்ளன.

“சுரங்கம் தோண்டும் பணிகள் அனைத்தும் முடிந்து, வரும் 2028ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்று கூறினர்.

குறிப்புச் சொற்கள்