தீய சக்திகள்: முதல்வர் எச்சரிக்கை

2 mins read
ad649116-bfb8-4ee2-a1b9-181203b016fb
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் சமூக ஊடகங்களைக் கண் காணிக்க வேண்டும் என்றும் சமூக ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படு பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

முதல்வர் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு தொடங்கியதாக தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிக அளவில் உள்ளது என்றார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவதை முதலாவது இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் இரண்டாவதாகப் பொது அமைதியைக் கெடுப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று நினைப்பவர்களுக்கு இடம் அளித்துவிடக் கூடாது என அவர் எச்சரித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் இத்தகைய உள்நோக்கோடு சில சக்திகள் செயல்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய போக்கை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என்றார்.

“கள்ளச்சாராயம், போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அறவே ஒழிக்க வேண்டும். இது எதிர்கால தலைமுறையைச் சீரழிக்கிறது. இவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

“சாலை விபத்துகளில் அதிகம் உயிரிழப்பு ஏற்படக் கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் சமரசம் மேற்கொள்ளாமல் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின், உண்மையான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

“அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையக்கூடிய வகையில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குங்கள்,” என அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்