சேலம்: தமிழகத்தில் அடுத்த ஓராண்டு காலத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு அறவே இருக்காது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பியுள்ளது என்றும் இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.
கோவையில் பில்லூர் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் பழுதுகளை அலுவலர்கள் உடனுக்குடன் சீரமைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மட்டுமே மழை குறைவாக இருந்தது. பிற இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
“அக்டோபர் 15-ம் தேதி முதல் வட கிழக்குப் பருவமழை பெய்யும் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர், டிசம்பரில் முழுமையாக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். மழை பெய்யாமல் இருந்தாலும், இன்னும் ஓராண்டு காலத்துக்கு தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு எந்த இடத்திலும் இருக்காது,” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாக இந்து தமிழ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

