சென்னை: புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 92% நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாட்டின் பெருநிலப் பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில், சுமார் 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்தப் பாலம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்தியாவின் முதல் கடல் பாலமான அது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையையும் கொண்டது.
பாம்பன் கடலில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டைக் கடந்து விட்ட நிலையில், பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக காணொளி மூலம் பிரதமர் மோடி 2019ல் அடிக்கல் நாட்டினார்.
புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடி. 101 தூண்களைக் கொண்ட பாலத்தில் அந்தத் தூண்களுக்கு இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு தண்டவாளங்கள் பொருத்தப்பட உள்ளன.
பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரமான, இயங்கக்கூடிய செங்குத்து தூக்கு பாலம் அமைய உள்ளது. இதுவரை 92% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
விரைவில், புதிய பாலத்தின் மத்தியில் தூக்குப் பாலம் அமைப்பதற்கான பணி தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.