தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வண்டலூர் பூங்காவில் லயன்சஃபாரியைக் காண திரண்ட வருகையாளர்கள்

2 mins read
dec4f0bd-58a4-4aa6-b7ac-a07473902cb5
தமிழ் நாட்டில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த நான்கு நாள்களில் மட்டும் 56,000 பேர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: ஊடகம்

செங்கல்பட்டு: சென்னைக்கு அருகேயுள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு 1977 விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில், தொடர் விடுமுறை காரணமாக அந்தப் பூங்காவிற்கு சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்தனர்.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் கிட்டத்தட்டட 56 ஆயிரம் பேர் உயிரியல்பூங்காவுக்கு வருகை தந்தனர். அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 21 ஆயிரம் பேர் வருகையளித்துள்ளனர்.

மேலும் பூங்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட சிங்கம் மற்றும் மான் உலவும் பகுதிகளைக் கடந்த இரண்டு நாள்களில் 950 பேர் சிறப்புக் கட்டணம் செலுத்தி பார்த்து ரசித்தனர்.

கொரோனா ஊரடங்கின்போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் “லயன்சஃபாரி” நிறுத்தப்பட்டது. பின்னர் பூங்கா வழக்கமாக திறந்த பின்னரும் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் சிங்கங்களைப் பார்வையிடும் “லயன் சஃபாரி”யை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சஃபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் பேருந்துகள் விடப்பட்டன. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியும் நவீனப்படுத்தப்பட்டு வருகையாளர்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது.

வண்டலூர் பூங்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளதால் சிங்கங்கள் உலவும் பகுதியைக் காண ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்