திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, விடுதி, அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை

2 mins read
79632323-2c4d-400a-b07d-6cf097533e53
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் வீடு, விடுதி, அலுவலகங்கள் என அவருக்குச் சொந்தமான, தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அக்டோபர் 6ஆம் தேதி அதிகாலையிலேயே சோதனை நடவடிக்கையைத் தொடங்கினர்.

அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுதவிர பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் என்னுமிடத்தில் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்தது. அதையடுதது அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், புதுச்சேரிக்கு அருகிலுள்ள வில்லியனூர் அகரம் கிராமத்தில் ஜெகத்ரட்சகனுடைய மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை ஏறத்தாழ 2 மணிக்கு சென்னை, புதுச்சேரி வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லூரி நிர்வாகக் கட்டடம், மருத்துவமனை நிர்வாகக் கட்டடம் உள்ளிட்ட பல இடங்களில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் சொந்த ஊர் புதுச்சேரிக்கு அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் வழுதாவூர் கலிங்கமலையில் உள்ளது. இவருக்கு புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

எனினும், மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்