நாமக்கல்: நாமக்கல்லில் அர்ச்சகர் ஒருவரின் வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதைச் சரிசெய்யும் பணியில் சமையல் எரிவாயு முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் அருண்குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தீப்பற்றிப் பரவியது.
அந்தத் தீ விபத்தில் அர்ச்சகரின் மனைவி தனலட்சுமி (60), எரிவாயு நிறுவனத்தின் ஊழியர் அருண்குமார் (25) ஆகியோர் கடுமையான தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அர்ச்சகர் வீட்டில் பரவிய தீ, பக்கத்து வீட்டுக்கும் பரவியதால் அங்கிருந்த பார்த்தசாரதி (70) என்பவரும் புகையால் மூச்சுத் திணறலுக்கு ஆளானார். அவரையும் அக்கம்பக்கத்தினரும் தீயணைப்புத் துறையினரும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி தனலட்சுமி, பார்த்தசாரதி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.