பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

1 mins read
a0771d82-6c66-475a-83c6-e73dc57c0523
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம்

சென்னை: “எதிர்க்கட்சிகளிடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒற்றுமையைக் கண்டு பாரதிய ஜனதா கட்சி அஞ்சி நடுங்குவது அதன் சோதனை நடவடிக்கைகள் மூலம் நன்கு தெரிகிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் கவனம் செலுத்துவது நல்லது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீண்டுகொண்டே செல்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி சஞ்சய் சிங்கின் கைதும், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் இல்லத்தில் நடந்த சோதனைகளும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதற்கான தெள்ளத்தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் மீதான இத்தகைய திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

அமலாக்கத்துறை வெளிப்படைத்தன்மையோடும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளதை பாஜக வசதியாக மறந்துவிடுகிறது.

ஆனால், சட்டத்தையும் மக்களாட்சியையும் துச்சமாக மதித்துச் செயல்படுவதிலேயே பாஜகவினர் குறியாக உள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்