சென்னை: திமுக அரசு கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருவதால் தான் கருணை வடிவான வள்ளலாரைப் போற்றுவதாகவும் அதன் அடையாளமாக கடலூர் மாவட்ட தலைநகரில் 17 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு ‘அருள்பிரகாச வள்ளலார்’ எனும் பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ‘வள்ளலார்-200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் இந்து கோயில்களை அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தவறானது என்றார்.
ஒரு கூட்டம் ஆன்மிக உணர்வை அரசியலுக்குப் பயன்படுத்தி அதன்மூலம் குளிர்காயப் பார்க்கிறது என்றும் தமிழக மக்கள் அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவு உள்ளவர்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
“தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்த பிரதமர் மோடி, தமிழக கோவில்களைப் பற்றி பேசியிருக்கிறார்.
“தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு கைப்பற்றி, ஆக்கிரமித்துள்ளது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருக்கிறார் பிரதமர். கோவில் சொத்துகள், அதன் வருமானங்களை தமிழக அரசு முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தியப் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியானதா என்றும் ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்துக்கு சென்று பேசுவதும் முறையா என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். பொய்யான செய்திகளை இந்தியப் பிரதமர் ஏன் கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோவில்களை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவற்றுள் எந்த நடவடிக்கையை பிரதமர் மோடி தவறு என்று கூறுகிறார். பிரதமரின் பார்வையில்தான் தவறு இருக்கிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.