சென்னை: அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதிமுகவை பற்றி பாஜகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம் என அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பாஜகவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவரித்தார் என இந்து தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் கூட்டணி குறித்து தமக்கு எந்தவித கவலையும் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகளும் அதுபற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
“கூட்டணியில் இருந்து செல்பவர்கள் குறித்த நாம் பேசவேண்டியதில்லை. பிரதமர் மோடி வேண்டும் என்பவர்கள் கட்சியில் இணைகிறார்கள். அடுத்த ஏழு மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது,” என்றார் அண்ணாமலை.
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதே தனது நோக்கம் என்று குறிப்பிட்ட அவர் எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்றார்.
“பாஜகவினர் எந்த இடத்திலும் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில் அதிமுகவை பற்றி இனி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்,” என்று அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.
பாஜக உடனான கூட்டணியை அதிமுக அண்மையில் முறித்துக்கொண்டது. இதுகுறித்து கவலை என்று பாஜகவில் ஒரு தரப்பினர் கூறி வந்த நிலையில், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி, கூட்டணி நிச்சயம் தொடரும் என்றார்.

