கல்லூரி மாணவரை ஓடஓட துரத்தி, அரிவாளால் வெட்டிய மாணவர்கள்: அலறியடித்து ஓட்டம் பிடித்த ரயில் பயணிகள்

1 mins read
888a83bf-b563-4343-a3a3-2acab3e6fad7
கடற்கரை ரயில் நிலையம். - படம்: ஊடகம்

சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவியது. சில மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மற்றொரு மாணவனை ஓடஓட துரத்திச் சென்று வெட்டினர்.

சென்னையில், கல்லூரி மாணவர்கள் இடையே வெடிக்கும் மோதல்கள் காரணமாக சென்னையில் அவ்வப்போது பதற்றச் சூழல் ஏற்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருபது வயதான சத்தியமூர்த்தி என்ற மாணவருக்கும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே அண்மைய சில நாள்களாக முன்விரோதம் நிலவி வந்தது.

இந்நிலையில், கல்லூரி முடிந்து சென்னையில் உள்ள கடற்கரையில் ரயில் நிலையத்தில் வீடு திரும்ப ரயிலுக்காகக் காத்திருந்தார் சத்தியமூர்த்தி. அப்போது அங்கு வந்த எட்டு மாணவர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், எட்டுப் பேரும் சேர்ந்த தங்கள் கையில் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கினர். தப்பித்து ஓடிய போதிலும் விடாமல் ஓடஓட துரத்திச் சென்று தாக்கியதைக் கண்டு மற்ற பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் தாக்குதல் நடத்திய மாணவர்களைப் பிடிக்க முயன்றபோது எட்டுப் பேரும் தப்பியோடிவிட்டனர். சத்தியமூர்த்தி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மோதல்