நீடிக்கும் சோதனை நடவடிக்கை; கட்டுக்கட்டாக சிக்கிய ரொக்கப் பணம்

2 mins read
5a105f25-51e3-4917-8bb1-9535e3eee053
வருமான வரித்துறை. - படம்: ஊடகம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுடன் தொடர்புள்ள இடங்களில் வெள்ளிக்கிழமையன்றும் சோதனை நடவடிக்கை நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருடன் தொடர்புள்ள இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் சிக்கியது என்றும் பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது என்றும் எசியா நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், அவருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி, நட்சத்திரத் தங்குவிடுதி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை சோதனையைத் தொடங்கினர். அது இரண்டு நாள்களாக நீடித்தது.

அச்சமயம் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் கட்டுக்கட்டாக சிக்கியது என்றும் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மருத்துவக் கல்லூரி, தங்குவிடுதி ஊழியர்களிடம் வருமானத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய 40 இடங்களில் சோதனை

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் பிரபல மருத்துவக் கல்லூரி, அதனுடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையால் பரபரப்பு நிலவியது.

மொத்தம் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. காலையில் தொடங்கிய இந்நடவடிக்கை இரவு எட்டு மணியைக் கடந்த பிறகும் நீடித்தது.

வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.10 கோடி ரொக்கப் பணத்தையும் பல்வேறு முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் வரி ஏய்ப்பு தொடர்பாகவே இந்தச் சோதனை நடைபெற்றதாகவும் சில ஊடகங்களில் வெளியான தகவலை சவீதா குழுமம் உறுதி செய்யவில்லை.

சவீதா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, பல்நோக்கு மருத்துவமனையின் நிறுவனர் வீரய்யனுக்கு, ஈரோட்டில் சொந்த வீடு உள்ளது. அங்கும் ஆறு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நாற்பது இடங்களிலும் உரிய பாதுகாப்புடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட குழக்கள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்