தேர்வில் முதலிடம் பிடித்தால் ஒருநாள் தலைமை ஆசிரியர்: மாணவர்களை ஊக்கப்படுத்தும் அரசுப் பள்ளி

1 mins read
2b53dcd0-6912-4ddb-a60a-63c2c14c5db8
தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் தர்ஷன் தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அருகில் ஆசிரியர்கள். - படம்: ஊடகம்

பொள்ளாச்சி: தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவரை அரசுப் பள்ளியின் ஒருநாள் தலைமையாசிரியராக நியமிக்கும் அறிவிப்புக்குப் பலத்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

பொள்ளாச்சி அடுத்துள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் 276 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர் ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும் இரண்டாவது மதிப்பெண் பெரும் மாணவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவியது. பல மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு படித்தனர்.

அண்மையில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. இதில் தர்ஷன், கவின்ராஜ் ஆகிய இரு மாணவர்கள் முதல், இரண்டாம் மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். இதையடுத்து தர்ஷனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர் இருக்கையிலும் அமர வைக்கப்பட்டார்.

இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜையும் உதவி தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து பாராட்டிய ஆசிரியர்கள், மற்ற மாணவர்களும் நன்றாக படித்தால் இதுபோன்ற கௌரவத்தைப் பெறலாம் என்று அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்