ஆருத்ரா நிறுவன மோசடி: துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்

2 mins read
b3904561-852b-4b10-a81f-dc30503b8b0b
ஆர்.கே.சுரேஷ். - படம்: ஊடகம்

சென்னை: ஆருத்ரா நிறுவனம் பொதுமக்களிடம் மோசடி செய்து வசூலித்த பெருந்தொகையில் ரூ.500 கோடி துபாயில் பதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, அந்தத் தொகையை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழகக் காவல்துறை மேற்கொண்டு வருவதாக தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்தது ஆருத்ரா கோல்ட் நிறுவனம். தங்களிடம் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 30 விழுக்காடு வரை வட்டி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி, ஆயிரக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்தனர்.

மொத்தம், ரூ.2,438 கோடி வசூல் செய்த அந்நிறுவனத்தார், ஒரு லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டு, மொத்தமாகப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகினர்.

இம்மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்பட 21 பேர் மீது காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது. 13 பேர் கைதாகினர். மற்றவர்கள் இன்னும் சிக்கவில்லை.

இந்நிலையில், தமிழக பாஜக நிர்வாகியும் திரைப்பட நடிகருமான ஆர்.கே. சுரேஷுக்கும் இம்மோசடியில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம் காவல்துறை விசாரணையைத் தொடங்கும் முன்பே துபாய் சென்றுவிட்டார். அவரைத் தேடப்படும் நபராக அறிவித்து, இந்திய விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் மோசடிப் பணம் ரூ.500 கோடியைத் துபாயில் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணையில் இது தெரியவந்ததாகவும் அப்பணத்தைத் திரும்பப்பெற துபாய் அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உரிய கடிதங்கள், ஆவணங்கள் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

இதற்கிடையே, ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் சிலர் துபாயில் பதுங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்