பட்டாசு விபத்தில் 14 பேர் பலி; சிஐடி விசாரணைக்கு மாற்றம்

2 mins read
afd92207-3991-412a-bafa-8775985e365b
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். - கோப்புப்படம்
multi-img1 of 2

பெங்களூரு: அத்திப்பள்ளி பட்டாசு விபத்து வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, இருப்பினும், கடையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதை நாங்கள் அறிந்தோம். உரிமம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது.

“கடையில் தீயை அணைக்கும் கருவி இல்லை. இது கடை உரிமையாளரின் முழு அலட்சியம். எனவே இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சோகம்

அத்திப்பள்ளி பட்டாசுக்கடையில் கடந்த சனிக்கிழமை மாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் டி.அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த மேலும் இரண்டு பேர் படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர்.

பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திப்பள்ளியில் கர்நாடகம்-தமிழக எல்லையில் சாலையோரம் பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. அங்கு ராமசாமி ரெட்டி என்பவரின் மகன் நவீன் என்பவருக்கு சொந்தமான ஒரு பட்டாசு கடையும் அதன் பின்புறம் பட்டாசுக் கிடங்கும் உள்ளது. சனிக்கிழமை மாலை அவரது கடைக்கு தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் இருந்து இரண்டு லாரிகளில் வந்த பட்டாசுகளை இறக்கி வைக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டது.

தமிழ் நாடு, கர்நாடக மாநிலங்கள் நிவாரணநிதி அறிவிப்பு

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகள் சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா மூன்று லட்ச ரூபாய் உதவித்தொகை அறிவித்தார். கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். 

சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்ட கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பட்டாசு விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

ராமதாஸ்: கடுமையான விதிமுறைகள் தேவை

அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, பட்டாசுகளை இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில், அத்திப்பள்ளி என்ற இடத்தில் பட்டாசுக் கடையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்