தஞ்சை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடாத கர்நாடக அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது என காவிரிப் படுகை பாதுகாப்புக் கூட்டியக்கமும் திமுக விவசாய அணியும் தெரிவித்துள்ளன.
காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடத்த இரு அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக விவசாய அணியின் மாநிலச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து கருகிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
“கர்நாடகா அணைகளில் தற்போது 80% தண்ணீர் இருந்தாலும் தமிழகத்துக்கு நீரைத் திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக, கன்னட அமைப்புகள் இருமுறை முழு அடைப்புப் போராட்டம் நடத்தின.
“எனவே, டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரைப் பாதுகாக்க, சம்பா சாகுபடியைத் தொடங்க, காவிரியில் மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி டெல்டா பகுதிகளில் முழு அடைப்பு, மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார் விஜயன்.

