தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரியலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேர் பலி

2 mins read
05e0041a-718b-48cb-8113-d9d92da95d79
பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட புகைமூட்டம். - படம்: ஊடகம்

அரியலூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பத்து பேர் மாண்டது அரியலூர் மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஆலைக்குள் சிதறிக் கிடக்கும் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும், விபத்து தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார்.

அரியலூர் மாவட்டம், திருமழபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அருகில் உள்ள வெற்றியூர் கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை சுமார் பத்து மணியளவில் ஆலைக்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடிபொருள்களும் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

சில தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கி்ழமை வழக்கத்தைவிட சீக்கிரமாகவே பணிக்கு வந்துள்ளனர். அவர்கள் ஆலையின் பெட்டக அறையில் அமர்ந்து காலை உணவு அருந்தி கொண்டிருந்தபோது தான் விபத்து நேர்ந்தது. பெட்டக அறையிலும் அதற்கு வெளியிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறின.

இதையடுத்து ஆலை முழுவதும் தீ பரவியதால் மற்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடிக்கத் தொடங்கியதாக சமயம் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

விபத்து ஏற்பட்டதும் ஆலைக்குள் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டனர். எனினும், இடைவிடாமல் வெடித்த பட்டாசுக் குவியல்களுக்கு மத்தியில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அந்த ஆலை பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி சுவர்ணாவும் காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லாவும் அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
பட்டாசுவிபத்து