சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறும் பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் மது விநியோகம் செய்வதை அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதற்காக 1937ஆம் ஆண்டின் மதுவிலக்குச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைக் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“திருமண நிகழ்வுகளின்போது மது அருந்த அனுமதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. ஆனாலும், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகளில் மது விநியோகம் செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அரசாங்கம் மது வணிகம் செய்வதில் கவனம் செலுத்துவதை ஏற்க முடியாது,” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களும் இதைத்தான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
“வெளிநாட்டவர்கள் மது அருந்தும் வழக்கம் கொண்டவர்கள் என்பதற்காக மாநாடுகளும் இதர நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திலேயே நாம் கடை விரிக்கத் தேவையில்லை; அது நமது பண்பாடும் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.
“மது வகைகளை பரிமாறுவதற்கு தமிழக அரசு துடிப்பதன் காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை அடுத்த சில ஆண்டுகளில் உலகத்தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டால் அதிலும் மது விநியோகிக்கப்படுமா? அதைத் தான் தமிழர் பண்பாடு வலியுறுத்துகிறதா?” என்று ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.